Skip to main content

இஸ்ரோ ஆராச்சி மையத்திலும் புகுந்த கரோனா! மூடப்பட்டது ஆராய்ச்சி மையம்!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
kanyakumari thirunelveli

 

 

சென்னைக்குப் புலம் பெயர்ந்தவர்கள் கொத்துக் கொத்தாகச் சொந்த ஊர் திரும்புவதால், கரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்கள் கூட தற்போது உச்சத்தை எட்ட ஆரம்பித்துள்ளது. அதன் தாக்குதல் அணுஆராய்ச்சி மையமான மகேந்திரகிரியின் இஸ்ரோ மையத்தையும் விட்டுவைக்கவில்லை.

 

நெல்லை மற்றும் குமரி மாவட்டம் சந்திக்கிற பார்டரிலுள்ள தென்மேற்குத், தொடர்ச்சி மலையருகேயுள்ளது மகேந்திரகிரி. இங்கே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரச எரிபொருளான கிரையோஜெனிக் எனும் இயந்திரம் தயாரிக்கும் வளாகம் அமைந்துள்ளது.

 

இந்தக் கிரையோஜெனிக் இயந்திரம் தான் விண்ணுக்கு அனுப்பப்படும் ராக்கெட்களை உந்திக் கொண்டு செல்வதற்குப் பயன்படுகிறது. ஆனால் விண்ணில் செலுத்தப்பகிற ராக்கெட் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தயார் செய்யப்படுகிறது.

 

பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரியின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுமார் 700 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்கள், 250 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மொத்தத்தில் உச்சக்கட்டப் பாதுகாப்பு பகுதி என்றாக்கப்பட்ட மகேந்திரகிரி மையம், கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட தனிப்பகுதி.

 

இதனிடையே இங்கு பணியாற்றுகிற உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் இன்ஜினியர் ஒருவருக்குக் கொரோனா அறிகுறி இருந்துள்ளது. உடனே அவர் அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

 

பின்னர் அவருக்கு அருகிலுள்ள குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிறகு அவர் அங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

இதன்பின் அவரோடு தொடர்பிலிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அவர் எங்கேனும் சென்றாரா எனவும் கண்காணிப்பிலிருக்கிறது. இதன்பின் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்பட்ட வில்லை. இஸ்ரோ மையத்திள் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் வள்ளியூர் பிரதீப் குமார் தலைமையிலான தீயணைப்புப் படைவீரர்கள் ஆராய்ச்சி மையம் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். 


மேலும் தொற்று கண்டறியப்பட்ட நபர் எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவருக்குத் தொற்று பாதிப்பு எப்படி வந்தது என்று புரியாத புதிராகவே உள்ளது. தொடர்ந்து தொற்றுப் பரவலைத் தடுப்பது குறித்து ஆராய்ச்சி மையத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டமும் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.                     

 

 

 

சார்ந்த செய்திகள்