தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த தியான நிகழ்ச்சிக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டன. தெற்கு பிரகாரத்தில் போடப்பட்டிருந்த பந்தல், மேடை அலங்காரம், தோரணங்கள், இருக்கைகள் போன்றவை அகற்றப்பட்டன.
பாரம்பரியமிக்க தஞ்சாவூர் கோவிலில் தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினால் கோவிலின் சிறப்பு பறிபோய்விடும். ஆகவே, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சார்பில் நடத்தப்படும் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தியான நிகழ்ச்சி எனில் அதற்கு மண்டபங்களுக்கு சென்றிருக்கலாமே. பாரம்பரிய கோவிலினுள் நடத்த வேண்டிய அவசியம் இல்லையே என்று கூறி கோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்தனர். அங்கு நிகழ்ச்சி நடத்த இடைக்கால தடை விதித்து, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள், கூடாரங்கள் போன்றவை முழுமையாக அகற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 10 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து வாழும் கலை அமைப்பினர்,கோவில் பிரகாரத்தில் அமைத்த பந்தல்களை அகற்றி நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள காவேரி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். தியான நிகழ்ச்சியை அந்த மண்பத்தில் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த இடைக்காலத்தடையை நிரந்தரமாக்க வேண்டும் என்று தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.