களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை விவகாரத்தில் தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தௌபீக் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஜனவரி 23- ந்தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் கழிவுநீர் ஓடையில் இருந்து வில்சனைக் கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியைக் கண்டெடுத்தனர். அதேபோல், ஜனவரி 24- ந்தேதி திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம் அருகிலிருக்கும் புதருக்குள் இருந்து வில்சனைக் குத்திக் கொல்லப் பயன்படுத்திய கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. ஒருபுறம் இந்தத் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
இதுதொடர்பாக உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, “களியாக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனைக் கொலைசெய்த தீவிரவாதிகள் இருவரும், திருவனந்தபுரம் வந்து அங்கிருந்துதான் எர்ணாகுளத்திற்கு பஸ் ஏறி சென்றுள்ளனர். திருவனந்தபுரத்தில் கத்தியையும், எர்ணாகுளத்தில் துப்பாக்கியையும் எதற்காக மறைக்க வேண்டும். ஒருவேளை திருவனந்தபுரத்தில் இருந்து பாதுகாப்பிற்காக எர்ணாகுளம் வரை துப்பாக்கியைக் கொண்டு வந்திருந்தாலும், பிறகு கர்நாடக மாநிலம் உடுப்பி வரை சுமார் 500 கிமீ தூரத்திற்கு துப்பாக்கி இல்லாமல்தானே இருவரும் பயணித்திருக்கிறார்கள்.
திருவனந்தபுரத்தில் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம்தான், அப்துல் சமீம் பலமுறை அடைக்கலம் தேடிச் சென்றிருக்கிறான். அப்படியானால் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களை அவர்களிடம் கொடுத்திருக்கலாம். எதற்காக வேறுவேறு இடங்களில் அவற்றைப் பதுக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
வில்சனைக் கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கிய ரிவால்வர் ரகத்தைச் சேர்ந்தது என்று காவல்துறை கூறியிருந்தது. ஆனால், எர்ணாகுளத்தில் கண்டெடுக்கப்பட்டதோ 7.65 மி.மீ. ஆட்டோமேட்டிக் ரக பிஸ்டல். இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இந்த ரக துப்பாக்கியை அந்நாட்டு ராணுவத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்கள். மேலும், ரிவால்வர் மற்றும் பிஸ்டல் துப்பாக்கிகள் இரண்டுமே வெவ்வேறு சுடும் தூரத்தைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் சுடும் தரம் மற்றும் வில்சனுக்கு ஏற்பட்ட காயங்களின் ஆழம், எஞ்சிய துப்பாக்கிக் குண்டுகள் எத்தனை என்பதுபோன்ற பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்கிறார்கள்.