கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கை முதலில் மாநில காவல்துறை விசாரித்து வந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாணவி உபயோகித்த செல்போனை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கனியாமூர் பள்ளி மாணவியின் தாயார் செல்வி சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் எனத் தெரிவித்து வழக்கறிஞருடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்தார். ஆனால், விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு விதித்துள்ளது. அதனால் நீங்கள் அங்கே ஒப்படையுங்கள் எனத் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் செல்போனை சிபிசிஐடி காவல்துறை ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாணவியின் தாயார், “சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கில் ஒருதலைபட்சமாகவே செயல்படுகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிக்குத்தான் துணை நிற்கின்றனர். ஆனால், கொலையைக் கண்டுபிடிக்க எந்த ஒரு முயற்சியையும் அவர்கள் செய்யவே இல்லை. அவர்கள் இதை தற்கொலையாக மாற்றுவதற்கு ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.
செல்போனை வைத்து ஏதாவது பெரிதாகச் செய்யலாம் என்பது சிபிசிஐடியின் முழு நோக்கமாக இருக்கிறது. அதனால் ஐஎம்இஐ நம்பர் கேட்பார்கள். எங்களிடம் இல்லாத நம்பர்களை எல்லாம் கேட்கிறார்கள். அதற்கு விளக்கம் கொடுங்கள் என்றாலும் தரமாட்டார்கள். அதனோடு டிவைஸ் நம்பர் என்று ஏதோ கேட்பார்கள். அதுக்கும் எங்களுக்கு சம்பந்தம் இருக்காது. அந்த டிவைஸ் நம்பருக்கு அர்த்தம் சொல்லுங்கள் என அவர்களிடம் பலமுறை கேட்டுள்ளேன். அதற்கும் விளக்கம் கொடுக்க மாட்டார்கள்.
சம்மன்களை அடிக்கடி கொடுத்து எங்களை மன உளைச்சளுக்கு ஆளாக்குவார்கள். இந்நிலையில், செல்போனை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இன்று ஒப்படைக்க வந்துள்ளோம். விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பது தான் எனக்கு முழுத்திருப்தியாக இருந்தது. ஆனால், சிபிசிஐடியிடம் தான் ஒப்படைக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவே அப்படித்தான் உள்ளது. அதனால் முறைப்படி சிபிசிஐடியிடம் ஒப்படைத்துவிடுங்கள் எனக் கூறிவிட்டனர்” என்றார்.