ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் ஒரே சமயத்தில் போலீஸாக தேர்வாகியுள்ள சம்பவம் தமிழக காவல்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கேள்விப்பட்டு அந்த சகோதரிகளை தொடர்புகொண்டு வாழ்த்தி மகிந்திருக்கிறார் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழாவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என்ற மூன்று மகள்கள். கூலிவேலை பார்த்து வருகிறார் வெங்கடேசன். ஒவ்வொரு நாளும் கஷ்ட ஜீவனம் தான். அதேசமயம், மூன்று பெண் குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் வெங்கடேசன். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தனர்.
இந்தநிலையில், மூத்தமகள் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சின்ன வயதிலிருந்தே 3 சகோதரிகளும் போலீசில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று கடுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வினை நடத்தியது தமிழக அரசு. மூன்று பேரும் அந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். மூவரும் தேர்வில் வெற்றிப் பெற்றார்கள். மூவரும் வெற்றிப் பெற்றதற்கே வெங்கடேசன் குடும்பம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
தேர்வு பெற்ற சகோதரிகள் மூவரும் பொன்னேரியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர். கடுமையான அனைத்து பயிற்சிகளையும் கற்று தேர்ந்தனர். நேற்று முன்தினம் இவர்களுக்கான பயற்சி முடிந்து சொந்த ஊருக்கு சென்றனர். அந்த கிராமமே திரண்டு வந்து 3 சகோதரிகளுக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தினர்.
இதுகுறித்து பேசிய வெங்கடேசன், ‘’போலீசில் சேர வேண்டுமென்பது என் ஆசை. ஆனா, அடிப்படை படிப்பில் நான் சேரவில்லை. அதனால், காவல்ர் தேர்வினை என்னால் எழுத முடியாமல் போனது. என் ஆசை எனது மூன்று மகள்களும் இப்போது நிறைவேற்றி இருக்கிறார்கள். என் சந்தோசத்துக்கு அளவே இல்லை’’ என்று உற்சாகமாய் பேசுகிறார் வெங்கடேசன்.
இந்நிலையில், மூன்று சகோதரிகளும் ஒரே சமயத்தில் போலீஸ் காவலராக தேர்வு பெற்று தமிழக காவல்துறையில் இணைந்திருப்பதை கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, உடனே மூன்று சகோதரிகளில் ஒருவரான வைஷ்ணவியை தொடர்புகொண்டு, ‘’ ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறதம்மா. மூன்று பேரும் ஒரே சமயத்தில் போலீஸாக இருப்பது சாதாரண விசயமல்ல. போலீஸ் வேலை மீது உங்களுக்குள் இருக்கும் அர்ப்பணிப்புதான் உங்களை வெற்றிப்பெற வைத்திருக்கிறது. வாழ்த்துகள். உங்கள் பணி சிறக்கட்டும்’’ என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்தியிருக்கிறார் கனிமொழி. அவரது வாழ்த்தில் நெகிழ்ந்துபோன வைஷணவி, ‘’எங்களை வாழ்த்திய முதல் அரசியல் தலைவர் நீங்கள் தான்மா. உங்களிடம் பேசியதே எங்களுக்கு ஏதோ சாதித்து மாதிரி இருக்கு. தமிழக காவல்துறையில் நாங்கள் மூணு பேரும் கடுமையாக உழைத்து நல்லபெயரை எடுப்போம்’’ என்று மனம் திறந்து பேசியுள்ளார். கனிமொழியை தொடர்ந்து அந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்தபடி இருக்கின்றன.