தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று (10-11-23) தூத்துக்குடிக்கு வந்திருந்தார். அதன்பின் அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “சாதனை படைத்துக் கொண்டிருக்கும் தென் தமிழகம் இன்று சாதி பிரச்சனையால் கொடூரமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் தச்சநல்லூரில் 2 இளைஞர்களை சாதியை சுட்டிக் காண்பித்து சிறுநீர் கழிக்கப்பட்டது என்பது மிக வேதனையாக உள்ளது. ஆகவே, தமிழகத்தில் சாதிய வன்முறை அதிகரித்திருக்கிறது என்பதை சொல்ல வேண்டியுள்ளது. நாங்குநேரி விவகாரம், வேங்கைவயல் விவகாரம் என தொடர்ந்து இதுபோல் நடப்பது கவலையளிக்கக்கூடிய ஒன்று.
அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நீட் தேர்வு தான் தலையாய பிரச்சனை என்று அதில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள். இது தவறு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் பிரச்சனை உள்ளதென்றால் சட்ட ரீதியாக அணுகலாம்” என்று பேசினார்.