'எனக்கு இன்னொரு முகம் இருக்கு; செந்தில்பாலாஜியை தூக்கிப்போட்டு மிதிப்பேன்' என்று அரவக்குறிச்சியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று இரவு போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., "அரவக்குறிச்சியில் போட்டியிடும் பாஜக கேண்டிடேட் அண்ணாமலைன்னு ஒருத்தர் இருக்காரு. அண்ணாமலைன்னு பேருவெச்சிக்கிட்டா ரஜினின்னு நினைப்பு. நாமெல்லாம் பாட்ஷாவ பார்த்து வளர்ந்தவங்க. ஆனா, அவரு சொல்றாரு... செந்தில் பாலாஜியை தூக்கிப்போட்டு அடிச்சுடுவேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அத காட்ட வெச்சிடாதீங்கன்னு.
நீ தொட்டுப்பாரு தம்பி. திமுக காரன் மீது கைய வெச்சு பாரு. அதுவும் பி.ஜே.பி.! உங்களைப் போல எத்தனை பேர நாங்க பார்த்திருப்போம். உங்கள மாதிரி மிரட்டலெல்லாம் பார்த்துட்டுத்தான் இன்னைக்கு வரைக்கும் நின்னுக்கிட்டு இருக்கோம். திமுக உடன்பிறப்புகளை மிரட்டிவிட முடியாது. மிரட்டி பார்த்தீங்கன்னா... நாங்க எழுந்து நின்னோம்னா... தாங்கமாட்டீங்க. இந்த வேலையெல்லாம் தமிழ்நாட்டுல வெச்சுக்காதீங்க. நீங்க வந்த ஊர்லயெல்லாம் பொறுத்துக்கிட்டாங்க. தமிழ்நாடு அப்படிக் கிடையாது. யாராக இருந்தாலும் நா காக்க வேண்டும்" என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை செய்துள்ளார் கனிமொழி.