பொள்ளாச்சி பாலியல் வழக்கை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், எம்பி கனிமொழி கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை கும்பல் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திமுக சார்பில் இன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எம்பி. கனிமொழி தலைமையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள், மாதர் சங்க அமைப்புகள், காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் பங்குபெற்றன.
இந்த கூட்டத்தில் பேசிய எம்பி கனிமொழி, பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் சம்பந்தப்பட்ட வீடியோ சம்மந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாட்டத்தின் எஸ்.பி.யாக இருக்கக்கூடிய பாண்டியராஜன் பேசுகையில், நான்கு வீடியோக்கள்தான் எங்களிடம் உள்ளது என்று கூறியிருக்கிறார். ஏழு ஆண்டு காலமாக இவர்கள் நான்கு பேர் அல்ல, 50 பேருக்கு மேலாக இந்த இளம்பெண்களை மயக்கி வீடியோக்கள் எடுத்து சித்ரவதை செய்திருக்கின்றனர். எஸ்.பி. சொல்வது அபாண்டமானது. நக்கீரன் ஆசிரியர் கோபால் அண்ணன் சொல்லுகிறார், ''பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களை, கேள்வி கேட்ட எனது நிருபரை மிரட்டுகிறார்'' என்று. நிருபர்கள் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியதுதான் ஒருத்தருடைய கடமை. ஆனால் அதைவிட்டுவிட்டு மிரட்டுவது என்பது தவறான ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. ஆளும் கட்சி பிரமுகராக யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். நாடே கொந்தளித்துப்போயிருக்கின்ற நிலையில் பொள்ளாச்சி பெரும் கொந்தளிப்பில் இருக்கிறது என்று பேசினார்.
போராட்டம் முடியும் தருவாயில் தேர்தல் விதிககளை மீறி இந்த போராட்டம் நடந்துள்ளதாக போலீசார் எம்பி கனிமொழி மற்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக நிர்வாகிகளை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.