இப்போதுள்ள ஆட்சி தொடர்ந்தால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
சேலம் மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரபு மணிகண்டன், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9, 2019) பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியது:
தமிழகத்தில் பரவலாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. அத்தியாவசிய தேவையான குடிநீருக்காகக்கூட மக்கள் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது. ஏரிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு குற்றங்கள் நடந்து வருகின்றன.
வரும் மக்களை தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் வரும். எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு, கடந்த மக்களவை உறுப்பினர் செய்யத்தவறிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவார். அவ்வாறு இரண்டு ஆண்டுகளில் அவர் தன் கடமைகளைச் செய்யத்தவறினால் அவருடைய ராஜினாமா கடிதத்தை பெற்று உங்களிடம் கொடுப்போம்.
இப்போது ஆட்சியில் இருப்பவர்களை தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதித்தால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லாமல் செய்து விடுவார்கள். எனவே, மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை படித்துப்பார்த்து அனைவரும் வாக்களியுங்கள். எந்தெந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும் என்பதையே நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக தந்திருக்கிறோம். எனவே, இளைஞர்கள் அதை புரிந்து கொண்டு வரும் ஏப்ரல் 18 அன்று வாக்களிக்க வேண்டும். ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தை மாற்றுவதற்கான முதல்படி. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
பரப்புரை முடிந்து நடிகர் கமல்ஹாசன் கிளம்பிச்செல்கையில், கூடியிருந்த கூட்டத்தில் இருந்து இளைஞர் ஒருவர், கமல் சார்... கமல் சார்... என அழைத்தார். தன்னைத் திரும்பிப் பார்க்கும்படியும் ஒலிபெருக்கியில் கூறினார். மேலும் அவர், இதேபோல இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பீர்களா? கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பீர்களா? என்றும் கேட்டார். இதையடுத்து சுற்றும்முற்றும் திரும்பி பார்த்த கமல்ஹாசன், இளைஞரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் கூட்டத்தினரிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கேள்வி கேட்ட நபருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.