
தர்பார் படம் முடிந்து பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதற்கடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது. சிறுத்தை சிவா டைரக்ஷனில் நடிக்கும் படத்திற்கும் பிறகும் சினிமாவில் நடிப்பேன் என ஏற்கனவே பேட்டியில் சொல்லியிருந்தார் ரஜினி. அது இப்போது உறுதியாகியிருக்கிறது.

கார்த்தியை வைத்து கைதி மெகா ஹிட் கொடுத்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யை வைத்து இயக்கும் படத்தின் ஷீட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவது உறுதியாகிவிட்டது என்று ஒரு செய்தி வெளியானது. இதில் கூடுதல் ஆச்சரியம் தருகிறது இன்னொரு செய்தி. ரஜினி- லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை தயாரிக்கப்போவது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்பதுதான் அந்த செய்தி. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத அந்த செய்தி உண்மையாக இருந்தால், அது இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.
கமல் அரசியலுக்கு வந்தாலும் ராஜ்கமல் நிறுவனத்தை அதன் நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து ஆக்டிவ்வாக நடத்தி வருகிறார் கமல். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் ’கடாரம் கொண்டான்’ படத்தை தயாரித்தது அந்நிறுவனம். ராஜ்கமல் பிலிம்ஸுக்கு 50வது படம் வருவதால் அப்படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.