மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று காலை துவங்கினார் கமல்ஹாசன். பின்னர் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்,
அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றதிலும், பள்ளிக்கு செல்ல நினைத்ததிலும் எந்த அரசியலும் இல்லை. கலாமின் பள்ளிக்கு செல்வதைதான் தடுக்க முடியுமே தவிர நான் பாடம் படிப்பதை யாராலும் தடுக்க முடியாது. நான் படித்த பாடத்தில் ஒரு பகுதி அப்துல்கலாமின் வாழ்க்கை. அவரது இல்லத்திற்கு சென்றதில் எனக்கு மகிழ்ச்சி. இறுதி ஊர்வலங்களில் நான் பங்கேற்பது இல்லை. என்னுடைய நம்பிக்கை அப்படி
மக்கள் முன் கொள்கைகளை அறிவிக்கவே எனக்கு விருப்பம். மதுரையில் என் கொள்கைகளை புரியும் வகையில் பேசுவேன். எனது அரசியல் பயணத்திற்கு ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே கொள்கை என்று சந்திரபாபு நாயுடு கூறினார். சினிமாவைவிட அரசியலில் அதிக பொறுப்பு எனக்கு உள்ளது. தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான் அவர்களது இல்லத்தில் வாழ ஆசைப்படுகிறேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். ஜனநாயக நாட்டில் யார வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு கூறினார்.