மதுரையிலிருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயிலை நேற்று மதியம் பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரியிலிருந்து காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேஜஸ் ரயிலானது குளிருட்டப்பட்ட பெட்டிகளை கொண்டதாகும். இந்த தேஜஸ் சொகுசு ரயில் கொடைரோடு, திருச்சி ஆகிய இடங்களில் மட்டும் நின்று செல்கிறது. மதுரையில் இருந்து புறப்பட்ட தேஜஸ் ரயில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
கொடைரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக மலர்தூவி தேஜஸ் ரயிலை வரவேற்றனர். அதன் பின் தேஜஸ் ரயிலை பார்க்க வந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்த தேஜஸ் ரயில் வரவேற்ப்பு நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரின் மனைவி விமலாராணியும் கட்சி காரர்களுடன் கலந்து கொண்டார். அதன் பின் தேஜஸ் ரயில் புறப்பட தயாரானது. அப்பொழுது திடீரென எம்.பி. உதயகுமார் மனைவி விமலாராணி தேஜஸ் ரயிலை பச்சைகொடி அசைத்து சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.
இந்த தேஜஸ் ரயில் வழி அனுப்பும் விழாவில் கொடைரோடு ரெயில்வே நிலைய அதிகாரிகளான ராமு மற்றும் பொன்மாரியப்பன் அதோடு கொடைரோடு ரெயில்வே நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சுப்பிரமணி மற்றும் போலீசார் உட்பட ஆளுமகட்சியை சேர்ந்த அரசியல் வாதிகளுடன் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தேஜஸ் ரெயிலில் முதன் முதலாக கொடைரோட்டிலிருந்து வசந்தி ஜெயசங்கர் என்ற ஒரு பெண் பயணி மட்டும் சென்னைக்கு சென்றார்.
தேஜாஸ் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது கோடைரோட்டுக்கு வந்த தேஜாஸ் ரயிலை மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றது எல்லாம் வழக்கமான நடைமுறைகள்தான். ஆனால் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரான உதயகுமாரின் மனைவி விமலாராணி கட்சியிலும், அரசுப் பதவியிலும் இல்லை அப்படி இருக்கும்போது எம்பி மனைவி எப்படி கொடி அசைத்து தேஜஸ் ரயிலை வழி அனுப்பலாம். இதற்கு உறுதுணையாக இருந்து ரயில்வே அதிகாரிகளும் விதிமுறைகளை மீறி செயல்பட்டு இருக்கின்றனர் என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் வருகிறது.