Skip to main content

வீட்டு வரி ரசீதுக்கு 13 ஆயிரம் லஞ்சம்; ஊராட்சி மன்ற தலைவர் டிரைவருடன் கைது

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

kallal panchayat president natchiyappan bribe issue sivaganga district

 

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சிக்குட்பட்ட கீழக்கோட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தன்னுடைய தந்தை மணிமுத்து பெயரில் இருந்த வீடு மற்றும் இடம் ஆகியவற்றை தன் பெயருக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கல்லல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தனது தந்தையின் பெயரில் இருந்த வீட்டிற்கு உண்டான வீட்டு வரியை தன் பெயருக்கு மாற்றி அதற்குண்டான ரசீதை வழங்கும்படி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

 

இந்நிலையில் கல்லல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள நாச்சியப்பன் (வயது 55) பாலாஜியின் பெயரில் வீட்டு வரி ரசீதை வழங்குவதற்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று  கேட்டதாக சொல்லப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி இது குறித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் நாச்சியப்பன் மீது புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின் பேரில் பாலாஜி கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பனிடம் ரசாயனம் தடவிய பணம் 13 ஆயிரத்தை கொடுக்கவிருந்த நிலையில், நாச்சியப்பன் பணத்தை  அலுவலகத்திற்கு வெளியே இருந்த தன்னுடைய கார் ஓட்டுநர் சங்கர் என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

 

அதன்படி பாலாஜி வெளியில் இருந்த சங்கரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ, ஆய்வாளர் ஜேசுதாஸ், உதவி ஆய்வாளர் ராஜா முகமது மற்றும் போலீசார் கையும் களவுமாக சங்கரை பிடித்து கைது செய்தனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பனையும் கைது செய்த போலீசார், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்