கள்ளக்குறிச்சி மாவட்டம் மோ.வனஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயா (வயது 20). இவருக்கும் தியாகதுருவம் அருகே உள்ள பல்லகச்சேகரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 25) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே கணவன், மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அதன் பிறகு கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் விஜயா தனது தாய் வீட்டுக்குச் சென்று வசித்து வந்துள்ளார்.
தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு முருகன் பலமுறை சென்று விஜயாவை அழைத்துள்ளார். முருகனுடன் சேர்ந்து வாழ தனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்ட விஜயா தாய் வீட்டிலேயே வசித்துள்ளார். அதன் பிறகும் அவ்வப்போது விஜயாவை சென்று சந்தித்த முருகன் தன் ஆசைக்காவது இணங்குமாறு அழைத்துள்ளார். அதற்கும் விஜயா மறுத்து விட்டதாகவும் இதனால் முருகன் மிகவும் விரக்தியிலும் கோபத்திலும் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தைச் சேர்ந்த முருகனின் சித்தி மகன் மாயவன் என்பவருக்கும் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த முருகன் மனைவியை கண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், விஜயா தொடர்ந்து மாயவனுடன் சென்று தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாக முருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து விஜயாவை கள்ளக்குறிச்சியில் தற்செயலாக சந்தித்த முருகன், “உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடக்கிறது. நீ அங்கு செல்லாமல் எங்கோ சென்று விட்டு வருகிறாய். எங்கே சென்றாய்” என்று கேட்டு விஜயாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயா, “உன்னுடன் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. என்னை தொந்தரவு செய்யக்கூடாது. என்னை விவாகரத்து செய்துவிடு” என்று கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த முருகன், “என்னுடன் வாழ உனக்கு பிடிக்கவில்லை. ஆனால், மாயவனுடன் மட்டும் எப்படி பழகலாம்” என்று கூறி மனைவியை கண்டித்தார். அதற்கு விஜயா, “அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் அவரை இரண்டாவதாக விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த முருகன் விஜயாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து விஜயா தனது தாயின் ஊரான வனஞ்சூருக்கு செல்ல ஏறிய பஸ்ஸில் முருகனும் ஏறி அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கிய விஜயா மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை என்பதை அறிந்த முருகன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயாவின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் விஜயா அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினார். அப்போதும் முருகனிடம் இருந்து விஜயா தப்பிக்க முடியவில்லை. மேலும், விஜயா உடலில் முருகன் சரமாரியாக பல இடங்களில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் ஒன்று திரண்டு முருகனை சுற்றி வளைத்தனர்.
இது குறித்து தகவல் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மனைவியை குத்திய ரத்தக்கறை படிந்த கத்தியுடன் நின்று கொண்டிருந்த விஜயாவின் கணவர் முருகனை பிடிக்க முயன்றார் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன். அவரையும் முருகன் கத்தியால் குத்த அவரது கையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விஜயாவின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனை கைது செய்த போலீசார் கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.