
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள வெள்ளி மலை கூட்டுரோடு அருகில் பிரபலமான கருப்புசாமி கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் பெருமாள் என்பவர் பூசாரியாக இருந்துவருகிறார். இவர் கோயிலில் உள்ள கருப்புசாமி மற்றும் அதன் துணை தெய்வங்களுக்குப் பூஜை செய்வதோடு, ஒவ்வொரு அமாவாசை அன்றும் பூசாரியான பெருமாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வது உண்டாம். அவரிடம் அருள்வாக்கு கேட்பதற்கும் கருப்புசாமியை வழிபடுவதற்கும் சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இக்கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த அமாவாசை அன்று குறி கேட்பதற்காக கருப்புசாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடினார்கள். அதில் பூசாரியிடம் அருள்வாக்கு கேட்பதற்காக சங்கராபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்காகப் பூசாரி பெருமாள், கருப்பசாமியிடம் வேண்டிக்கொண்டு அக்குடும்பத்திற்கு அருள்வாக்கு கூறிக்கொண்டிருந்தார். அப்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஆனந்த் என்பவர் திடீரென அங்கிருந்த அரிவாளை எடுத்து பூசாரியின் முதுகில் வெட்டியுள்ளார். இதைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்ததோடு அரிவாளால் வெட்டிய ஆனந்தை சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டனர்.
வெட்டுப்பட்ட பூசாரி பெருமாளை மீட்டு அருகில் உள்ள மாவடிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்த கரியாலூர் போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.