கள்ளக்குறிச்சி மாவட்டம் புத்தந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மகன் ஏழுமலை (வயது 26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிச்சயதார்த்தம் நடந்த மாப்பிள்ளை ஏழுமலை நேற்று வெளியூர் செல்வதற்காக தங்கள் ஊர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஐயம்பெருமாள் என்பவரது மகன் அஜித் குமார் (வயது 24) என்பவர் ஏழுமலையிடம் சென்று நீ நிச்சயதார்த்தம் செய்துள்ள பெண்ணை நான் காதலிக்கிறேன். நீ எப்படி நிச்சயதார்த்தம் செய்யலாம் என்று ஆத்திரத்துடன் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அஜித் குமார் ஏழுமலையின் முதுகில் குத்தி உள்ளார். ஏழுமலை வலி பொறுக்க முடியாமல் கூச்சல் போட்டுள்ளார். உடனே அஜித் குமார், "கத்தி சத்தம் போட்டு ஊரைக் கூட்டினால் உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் ஏழுமலையிடம் விசாரணை செய்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் விசாரணை செய்து அஜித் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். காதலித்த பெண்ணை இன்னொருவர் நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்ய முயன்ற ஆத்திரத்தில் நிச்சயதார்த்த மாப்பிள்ளையைக் கத்தியால் குத்திய சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.