கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கன்யாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலை பள்ளியில் 12- ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு, கடந்த ஐந்து நாட்களாக உடலை வாங்க மறுத்து அந்த மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (17/07/2022) காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. கல்வீச்சில் காவல்துறை உயரதிகாரிகள் உள்பட 20- க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் வானத்தை நோக்கி காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரக்காரர்களை எச்சரித்தனர். மேலும், காவல்துறையின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதிரடிப்படையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். தமிழக உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்தனர்.
சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்தும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சின்னசேலம் பகுதியில் அசாதாரண சூழல் காரணமாக மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகளும் வேப்பூர் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பின்னர் செய்தியாளர்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சின்னசேலம், நைனார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணை அடிப்படையில் கலவரத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக் கண்ணன், "கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் யார் சம்மந்தப்பட்டிருந்தாலும் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் 900 காவல்துறையினர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.