கள்ளக்குறிச்சி பகுதியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேல் அக்ரகார தெருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் நான்கு பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் கள்ளக்குறிச்சி நகரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரின் வீட்டின் அருகில் சென்று அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு சிரமமாக இருந்ததால் அவர்கள் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில் நான்கு முனை சந்திப்பு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு நோய் தொற்று பாதித்த அந்த நால்வரையும் சுகாதாரத் துறையினர் பாதுகாப்பு கவசத்துடன் வேனுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.
அவர்கள் வீட்டிலிருந்து அந்த நான்கு பேரும் நடந்து வந்தனர். நான்கு முனை சந்திப்பில் நின்று கொண்டிருந்த வேனில் 4 பேரையும் ஏற்றினர். அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மட்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற மறுத்து ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததோடு, தப்பிச் செல்வது போல அங்குமிங்கும் போக்கு காட்டினார். அப்போது இதனை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் சுகாதார ஊழியர்களிடம் போக்குக் காட்டி பிடிவாதம் பிடித்த அந்த இளைஞரின் செயலை அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போக்குவரத்து போலீசார், அந்த இளைஞரை எச்சரிக்கை செய்தனர். அதன் பிறகே அந்த இளைஞர் வேனில் ஏறினார். பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.