கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குநர் இடம் பெறக் கூடாது என பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் விசாரணைக்குழுவில் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பு அந்த குழுவில் இடம் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கலாஷேத்ரா அறக்கட்டளை வகுத்துள்ள விதிமுறைகள் பொதுவெளியில் வெளியிட வேண்டும். பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்க வேண்டும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் அளித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணனின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் நவம்பர் 9ஆம் தேதி அந்த அறிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.