சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூடியது. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படன.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தெரிவிக்கையில், “தமிழகத்தில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நலப் பாதுகாப்பு திட்டங்கள் மூலமாக பயனடைகின்றனர். கைம்பெண் உதவித்தொகை, ஆதரவற்ற முதியோருக்கான மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள். வரும் 24 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் 3 கட்டங்களாக நடைபெற உள்ளன. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்” என தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சரவை கூட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “உதவித் தொகைகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கக் கூடியவர்களுக்கும் விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கைம்பெண், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு 845 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன். கலைஞர் நூற்றாண்டு திட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.