Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்; தமிழக அரசு புதிய அறிவிப்பு

Published on 13/08/2023 | Edited on 14/08/2023

 

kalaignar  Women Rights Project  Tamil Nadu Government New Notification

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் முதற்கட்ட விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்துப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில், இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

 

kalaignar  Women Rights Project  Tamil Nadu Government New Notification

 

இந்த கூட்டத்தில் அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவின்படி, “இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய் 1200 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்தால் அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவாக ஆய்வு செய்தார்.

 

முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது. அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். எனவே, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்,  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர்  க. பொன்முடி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா இ.ஆ.ப, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்