கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதே சமயம் இந்த திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் முதற்கட்ட விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முதற்கட்ட முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத் தகவல்களைச் சரிபார்க்கும் கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த சரிபார்க்கும் பணியின் போது 5 லட்சத்திற்கும் மேலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரூ.1000 பெற உள்ள குடும்ப தலைவிகளுக்கு என பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இறுதிக்கட்ட ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, சிறப்புத்திட்ட செயலாக்க இயக்குநர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.