முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுகவினர் ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இன்று காலை 4 மணியளவில் மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.
4 பிரிவுகளில் (5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ, 42 கி.மீ) நடந்த இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ்களும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். மேலும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் உதயநிதி, நேரு உள்ளிட்டவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆட்ட நாயகன் கேள்விப்பட்டுள்ளோம், ஆனால் அமைச்சர் மா. சுப்ரமணியன் ஓட்ட நாயகன். கலைஞரிடம் சிறப்பான பெயரைப் பெற்றவர்களில் அமைச்சர் மா. சுப்ரமணியனும் ஒருவர். செயல்பாட்டிலும் ஒரு மாரத்தான் அமைச்சர் போல் விளங்குகிறார் மா. சுப்ரமணியன். திமுக ஆட்சிக்கு வந்தபோது கொரோனா என்ற கொடிய நோயில் தமிழ்நாடு சிக்கித் தவித்தது. கொரோனாவை திமுக சிறப்பாக கட்டுப்படுத்தியது. அனைவரும் ஒற்றுமையாக இணைந்து ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிக்கின்ற பணியில் ஈடுபட்டோம். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48, வரும் முன் காப்போம் முகாம்கள் நடைபெறுகின்றன. 15 மாதங்களில் சென்னை கிண்டியில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
கலைஞர் நினைவு பன்னாட்டுப் போட்டி 2020ல் மெய் நிகர் மாரத்தான் போட்டியாக நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் இந்த ஆண்டு முன்பதிவு கட்டணமாக ரூ.3.42 கோடி கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 73,206 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்; இந்த போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அரசு அதிகாரிகள், திருநங்கைகள், ஆண்கள், பெண்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியுள்ளனர். எனவே இது சாதாரண மாரத்தான் கிடையாது, ஒரு சமூக நீதி மாரத்தான். இதில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.