திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தைக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தியது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகிய பரிசுகளும், மாநில அளவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.1,00,000, ரூ,50,000 மற்றும் ரூ.25,000 ஆகிய பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 228 மாணவ, மாணவியர்களும், மாநில அளவில் 6 மாணவ, மாணவியர்களும் இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.