முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு (15.08.2023) சுதந்திர தினவிழா உரையில், ‘சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்’ என்னும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, சென்னை கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம்,பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், ஜிப்லைன், பனிமூட்டப்பாதை உள்ளிட்டவை இதில் இடம்பிடித்துள்ளன.
பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்துள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (07-10-24) மாலை 6 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார்.