கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோடம்பாக்கத்தில் உள்ள முகாமை திறந்து வைத்தார். இந்த மருத்துவ முகாமில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளன. இதற்காக சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.