சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.
மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து சமூக வலைத்தளப் பதிவில், “கலைஞர் என்றாலே போராட்டம் தான். அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம் தான் இந்த நினைவிடம். என்றென்றும் கலைஞர்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.