விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள எக்கியார்குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கல்வராயன் மலையடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதி தான் கல்வராயன் மலைப்பகுதி. நீரோடைகளில் வரும் நீரை எடுத்து சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி மலையடிவாரத்திலேயே சட்ட விரோதமாக விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் ''என்னப்பா பாக்கெட் சின்னதா இருக்கு 80 ரூபாய்க்கு கொடு'' என கேட்க இப்போயெல்லாம் கிடைக்கிறதே பெருசு. 100 ரூபாய்தான் குறைக்க முடியாது'' என கள்ளச்சாராய பாக்கெட்டுக்கு பேரம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்டரி மூலப்பொருட்களை வைத்து சாராயம் காய்ச்சுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.