முதுபெரும் தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வனாருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடந்தது. அவரது 50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்ப் பணியையும், படைப்புப் பணியையும் பாராட்டும் விதமாக, அவருடைய முன்னாள் மாணவர்களும் காமராஜர் கல்வி அறக்கட்டளையினரும் இணைந்து இவ்விழாவை நடத்தினர்.
வேலுடையார் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி தலைமையில் நடந்த இந்த விழாவில், தமிழறிஞர் ஞானச்செல்வனாரைப் பாராட்டியப் பேசிய முன்னாள் அரசவைக் கவிஞரும் பாடலாசிரியருமான முத்துலிங்கம் ”தமிழுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் ஞானச்செல்வன். தமிழகத்தின் மூத்த தமிழறிஞரான அவர், தமிழாசிரியர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர். தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் செய்தி அறிவிப்பாளர்களுக்கும், தமிழைப் பிழையில்லாமல் உச்சரிக்கச் சொல்லிக்கொடுத்தவர். இப்போதும் கூட தமிழைப் பிழையிலாமல் பேசவும் எழுதவும் பலருக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் .இப்படிப்பட்ட தமிழறிஞர்களால்தான் தமிழன்னை இன்னும் இளமை நலம் குன்றாமல், தன் கட்டுக்கோப்பும் மரபுத் தன்மையும் மாறாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறாள்.
உலகின் தொன்மையான மொழிகளில் தலையாய மொழியாக நம் தமிழ்மொழி திகழ்கிறது. உலகில் இருக்கும் ஆறாயிரம் மொழிகளில், தொன்மைச் சிறப்போடு, தனித்து இயங்கும் வல்லமையோடு தமிழ்மொழி விளங்குகிறது. உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்வது தமிழ்மொழிதான் என்று இன்று உலகளாவிய ஆய்வாளர்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட தமிழுக்கு இன்று நம் தமிழ்நாட்டிலேயே பலவகையிலும் ஆபத்துகள் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடப் புத்தகங்களிலேயே, தமிழின் தொன்மைச் சிறப்பைக் குறைத்துக்காட்டும் அளவிற்கு நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய இழிவிலிருந்து தமிழைக் காப்பாற்ற, ஞானச்செல்வனாரைப் போன்ற அறிஞர்களின் தொண்டு நமக்குத் துணையாக இருக்கிறது. எனவே தமிழுக்குத் தொண்டாற்றும் ஞானச்செல்வனாரைத் தமிழுலகம் கொண்டாடவேண்டும். தமிழக அரசு அவருக்கு விருதுகளைக் கொடுத்துப் பாராட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
ஏற்புரையாற்றிய ஞானச்செல்வனார் ”நம் தமிழ்மொழி ஒழுக்கம் கலந்தமொழி. அதைக் கற்க மறந்ததால் இப்போதைய பிள்ளைகளிடம் ஒழுக்கம் குறைந்துவருகிறது. இங்கே பிறமொழியைப் படிப்பவர்களும் தமிழைக் கற்கவேண்டும். ஏனென்றால் அது படிப்பவர்களின் மனத்தையும் தரத்தையும் உயர்த்தும் தன்மைகொண்டது. நாம் துறைதோறும் தமிழை வளர்க்கப் பாடுபடவேண்டும். நமக்கிடையே எத்தகைய வேற்றுமைகள் இருந்தாலும், நாம் உணர்வோடு ஒன்றுபட்டுத் தமிழை வளர்க்கவேண்டும். தமிழ் நம் ஆடையல்ல; அடையாளம்” என்றார்.
விழாவில் நகைச்சுவை நாவலர் இரெ.சண்முகவடிவேல் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஞானச்செல்வனாரை வாழ்த்திப் பாராட்டினர்.