நெல்லையிலுள்ள பாளையைச் சேர்ந்தவர் பாப்புராஜ். அமெச்சூர் போட்டோகிராபரான இவர், அந்நகரின் பள்ளி, கல்லூரிகளின் மாணவ மாணவியரின் செருப்புகள் துடைத்தும், ஷூ பாலீஸ் போட்டும் சேர்ந்த பணத்தைக் கொண்டு நிவாரணப் பொருட்கள் வாங்கி கஜா புயலால் பாதித்த குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.
நக்கீரன் இணையதள நிருபரிடம் அவர் கூறியதாவது,
ஊடகம், டி.வி.க்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பிள்ளைகள் படும் கஷ்டத்தையும் துயரத்தையும் கண்டு மனம் பதறினேன். ஆனால் சாதாரண புகைப்படக்காரரான என்னால் அவ்வளவு பணம் செலவழிக்க வழியில்லை. ஒரு யோசனையுடன் நகரின் பள்ளி கல்லூரிகளின் வாசலில் அமர்ந்து, உதவிக்கான போர்டை வைத்துக் கொண்டு மாணவ மாணவிகளின் கால் செருப்புகளைத் துடைத்தேன். அவர்களின் ஷூக்களுக்குப் பாலீஷ் போட்டேன் அனைவரும் தாராளமாக உதவினார்கள். சிலர் செருப்பு துடைக்க வேண்டாமென்று பணம் கொடுத்தார்கள்.
வாரத்திற்கு இப்படி இரண்டு நாட்கள் என்று முறை வைத்து ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களுக்கு சேவை செய்தேன். இதன் மூலம் 31473 ரூபாய் சேர்ந்தது. மேலும், பாளை ரோஸ்மேரி பள்ளியினரும் தாராளமாக உதவினார்கள், அதுதவிர எங்களின் அமைப்பான அன்னை தெரசா பகிர்வு நண்பர் குழுவும் சேர்ந்தே பணியாற்றினோம். இதில் கிடைத்த இரண்டு லட்சத்தில் குடும்பத்திற்கு தேவையான், பால் பவுடர் போர்வை, பெட்ஷீட் சமையல் சாமான்கள் என அனைத்தும் வாங்கிய நாங்கள் கடந்த 4ம் தேதி நாகப்பட்டினம், திருத்துறைபூண்டி மற்றும் காரப்பிடாகை, வேதாரண்யத்தின், சீதக்காட்டுத்துறை ஆகிய கிராமத்தின் 150 குடும்பத்திற்கு வழங்கினோம்.என்றவர் இது எங்களனைவருக்கும் ஆத்மதிருப்தியாக இருந்தது என்றார்.
மனிதர்கள் மனம் வைத்தால், எந்த ரூபத்திலும் உதவலாம் என்பதற்கு சான்று இந்த சாமானியனின் செயல்.