செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மாரடைப்பு காரணமாக நேற்று (19.10.2023) உயிரிழந்தார். அவரது மறைவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேல்மருவத்தூரில் ஒரு பக்தி அமைப்பினை - அவருடைய சிந்தனைக்கு ஏற்ப அமைத்து வாழ்ந்த தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் (வயது 82) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லையென்றாலும் கூட, அதில் அவர் ஒரு மவுனப் புரட்சியாளராகவே இறுதிவரை இருந்தது மிகவும் வியக்கத்தக்கதாகும். தமிழிலேயே பூசை முறை, அதிலும் பெண்களே அதை நடத்தலாம் என்பது ஹிந்து சனாதனத்திற்கு உடன்பாடில்லாத ஒன்று என்று அறிந்து ‘தன் வழி தனி வழி’ என்று ஆக்கிக்கொண்டு வாழ்ந்தவர்.
வெறும் பக்தி திருப்பணியோடு அவர் நின்று விடாமல், மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்ற பல கல்வித் திருப்பணிகளையும் செய்தவர் என்ற முறையில், சமய சீர்திருத்தத்தில் அவர் ஒரு தனி முத்திரை பதித்து ஆரியத்தின் மறைமுக எதிர்ப்பினையும் எதிர்கொண்டு வளர்ந்தவர் - மனிதநேயர். அவரது மறைவால் வருந்தும் அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், அவரது பக்தர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் திராவிடர் கழகம் சார்பில் மனிதாபிமானத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.