Skip to main content

தமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - கி.வீரமணி எச்சரிக்கை!

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
தமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - கி.வீரமணி எச்சரிக்கை!



நெல்லை - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது என்று துணைவேந்தர் அறிவித்திருப்பது - தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு விரோதமானது - மாநில அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வு காணப் பெறல் வேண்டும் - இல்லையேல் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இன்றைய ‘இந்து தமிழ் திசை’ (15.10.2018) நாளேட்டில் ஒரு கண்ணீர்க் கடிதத்தினை,  முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி எழுதியுள்ளார். திருநெல்வேலியில் உள்ள ‘‘மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது’’ என்று தொடங்கியுள்ளது அக்கடிதம் - தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கும், கல்வியாளர்களுக்கும் வெட்கமும், வேதனையும் அளிக்கக் கூடியதொன்றாகும்!


இதோ அக்கடிதம்: 
 

தமிழ்நாட்டில் தமிழுக்கு 
ஏன் இந்த அவல நிலை? 
 

‘‘மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என்பதால் எனக்கு மிகுந்த மன வேதனையும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்கும் மாணவரில் மிகப் பெரும்பான்மையோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய, அடித்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். முதல் தலைமுறை கல்லூரி கல்வி கற்கும் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். ஆங்கிலம் புழங்காத சமூக சூழ்நிலையைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு பெருமையடையும் சமூக நீதி இவர்களுக்காகத்தான். இவர்களுக்குப் பெரும்பாலும் வகுப்புகள் தமிழ் வழியில்தான் நடக்கின்றன. 
 

இல்லாவிட்டால் எதுவும் புரியாத, கற்றலே நடைபெறாத புகைமூட்டமாகத்தான் வகுப்பறைகள் இருக்கும். துறைக்குரிய அறிவைப் பெறுவதுதான் கல்வியேயன்றி, எந்த மொழி வழியே அதை வெளிப்படுத்துகின்றனர் என்பது அல்ல. ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டுமென்றால், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைவது நிச்சயம். தங்கள் துறை அறிவை நன்கு கற்ற மாணவரும் ஆங்கிலத்தில் எழுத இயலாமல் தோல்வியே அடைவர். 
 

வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லாத இந்த விதியை வலியுறுத்துவது விபரீத விளைவுக்கு இட்டுச் செல்லும்.


தமிழ்நாட்டில் தமிழுக்கு ஏன் இந்த அவல நிலை? தமிழ் வழிக் கல்வி தாழ்ச்சியின் முத்திரையாக எப்படி மாறிற்று? தமிழ்நாட்டின் சமீபகால அரசியல் - சமூக வரலாற்றுப் போக்கில் தமிழ் மொழிக்கு மையத்துவம் இருந்திருக்கிறது. தமிழின் தொன்மை, பொருண்மை, கலாச்சார - சிந்தனை - இலக்கிய - கலை வளம் இவையெல்லாம் தமிழ் மக்களின் தனிப் பெரும் பெருமையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆனால், வகுப்பறையில் தமிழ் அவமானப்படுத்தப்படுகிறது; தேர்வுக் கூடங்களிலிருந்து விரட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் ஒரு பல்கலைக்கழகம் தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுப்பது தமிழ் மக்களுக்கு, தமிழக அரசுக்கு, கல்வியின் லட்சியத்துக்கு, சமூக நீதிக்கு விடப்பட்ட சவால். இதை அனுமதிக்கப்போகிறோமா?’’
 

 - வே.வசந்தி தேவி, 
சென்னை  முன்னாள் துணைவேந்தர், 
15.10.2018    
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.



இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.பாஸ்கரன் என்பவர் பட்டாங்கமாய் நெல்லை கோவில் ஒன்றில் சென்று காவி வேட்டி அணிந்து உடுக்கடிக்கு ஆட்டம் போட்டு, அது தொலைக்காட்சியில் வந்துள்ளது.

 

மதச் சார்பின்மையை காலில் போட்டு மிதிக்கும் துணைவேந்தர்

மதச்சார்பின்மை என்ற  அரசியல் சட்ட அடிப்படை கொள்கைக்கு இது முற்றிலும் முரணான செயல். பக்தி அவரது பூஜை அறைக்குள் இருக்கவேண்டும். அவர் வெளியே வந்து ஆடினால், அது தனி நபர் ஆட்டமாகப் பார்க்கப்படாமல், துணைவேந்தர் ஆடினார் என்று செய்தி வருகிறது! இது மகா மானக்கேடு கல்வியாளர்களுக்கு!!

அவரது பல்கலைக் கழகத்தில் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழில் தேர்வு எழுத ஏன் உரிமை மறுக்கப்படவேண்டும்? புரியவில்லை.
 

தமிழ்நாடு அரசின் 
இருமொழித் திட்டம் என்னாயிற்று?
 

தமிழ்நாடு அரசின் கொள்கை இருமொழித் திட்டம் (தமிழ் - ஆங்கிலம்) அல்லவா?

இது தமிழ்நாடு - இங்கே அரசு ஆணைப்படி வழக்கில் உள்ள தமிழ் மொழி வாழ்த்தின் ஆசிரியர் பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா இப்படிப்பட்ட கொடுமை நிகழவேண்டும்?
 

விதிகள் ஏதாவது குறுக்கிட்டால் அதனை உடனடியாக மாற்றி, மாணவர்தம் அறிவை, செறிவை தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதித்து, விடைத்தாளைத் திருத்தி - அடையாளம் கண்டுபிடிக்கலாமே!
 

நாடு தழுவிய கிளர்ச்சி - எச்சரிக்கை!
 

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையினர் குறிப்பாக அமைச்சர், கல்விச் செயலாளர் இதில் உடனடிக் கவனஞ் செலுத்தி, அனுமதித்த புதிய ஆணை ஒன்றை - தேவைப்படின் - நிறைவேற்றி முதல் தலைமுறை, கிராமப்புற மாணவர்கள், தமிழில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்து பட்டதாரிகளாக விரும்பும் மாணவச் செல்வங்களுக்கு அந்த உரிமையை வழங்கவேண்டும். தமிழில் எழுத முயலும் மாணவர்களுக்குத் தடை ஏதும் விதிக்கப்படக் கூடாது!


இன்றேல், நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது தவிர்க்க முடியாதது.
உதவாதினி தாமதம் உடனே விழி தமிழக அரசே!


 

சார்ந்த செய்திகள்