மாநில உரிமைகளை காக்க மெரினா கடற்கரைப் போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசின் சிந்தனைக்கு, செயலாக்கத்திற்கு முக்கிய வேண்டுகோள்!
சென்னை மெரினா கடற்கரையில் காவிரி மற்றும் மாநில மக்கள் உரிமைகளைக் காக்கத் திரளும் - அறவழியில் அமைதியாக மத்திய அரசுக்கு எதிர்ப்பை காட்டும் போராட்டத்தை ஏன் மாநில அரசே தடுக்க வேண்டும்? வறண்ட காவிரியைப் போல வறண்ட உள்ளம் கொண்ட மத்திய அரசின் போக்கைக் கண்டிப்பதற் காகவே இந்தப் போராட்டம்! அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பார்க்க வேண்டியது மட்டும்தான் தமிழக அரசின் காவல் துறையினரின் கடமையாக இருக்க வேண்டும்!
அமைதி வழியில் கடற்கரையில் தமிழக மக்கள் திரண்டு, தமது உணர்விற்கு வடிகால் தேடுவதையும், மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதமான மாநில உரிமைகள் பறிப்பினை எதிர்த்துக் குரல் கொடுப்பதையும் ஏன் தடுக்க வேண்டும்?
தமிழக அமைச்சர்கள், ஆளும் கட்சியின் உண்ணாவிரதம் என்பதை விட அது மேன்மையானதாயிற்றே! ஏன் தடுக்கிறீர்கள்? உணர்வுகளைக் காட்ட அனுமதிப்பதே சரியானது. அரசும், காவல்துறையும் தமது போக்கினை மாற்றி மறுபரிசீலனை செய்து மெரினா கடற்கரைப் போராட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும். இது ஒரு முக்கிய வேண்டுகோள்! இவ்வாறு கூறியுள்ளார்.