உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இலக்கியம், ஆன்மீகம், கலை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து, டிவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டிருந்த பதிவில், ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மீது எனக்குப் பேருவகை ஏற்பட்டுள்ளது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வின் கொண்டாட்டம் மற்றும் அழகான தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டாடுவதாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், 'காசி சங்கமம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களைக் குறிப்பாக ஐஐடியில் படிக்கக் கூடிய மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்க்கக்கூடிய முயற்சி என்ற அடிப்படையில்தான் இந்த முயற்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அவர்கள் கால் ஊன்றுவதற்கும், மாணவர்களைப் பிடிப்பதற்கும் அரசாங்கத்தைப் பயன்படுத்துகின்ற நிலைமையை அவர்கள் கையில் எடுத்து உள்ளார்கள்'' என்றார்.