கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிற ஊரடங்கின் காரணமாகப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி காப்பாற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு கடந்த 28 நாட்களாக அமலில் இருந்து வருகிறது. அனைத்து பகுதி மக்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் காரணமாகத் தமிழகம் முழுவதுமுள்ள மாற்றுத்திறனாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை எதுவும் தமிழ்நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.
தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் அறிவித்துள்ள போதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த நிவாரணத் திட்டமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பசி, பட்டினியோடு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் உடல்ரீதியாக பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலைமையைத் தாங்கள் அறிந்ததே. இதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திரம் வழங்கப்படும் ஓய்வூதியமும் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளை இப்பெரும் சோகத்திலிருந்து காப்பாற்றிட மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5000 ரூபாயும், உணவுப் பொருட்களும் இலவசமாக வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
உதவிகோரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி எண் ஒன்று துவங்கப்பட்டிருந்தாலும், அந்த இணைப்பு முறையாகச் செயல்படுவதில்லை. அப்படியே தொடர்பு கிடைத்தாலும் உரிய பதில் ஏதும் கிடைப்பதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர். எனவே, இப்பிரச்சினையைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தொகை கிடைத்தால் மட்டுமே இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மாற்றுத்திறனாகள் வாழ முடியுமென்பதோடு, இவர்களது அன்றாட மருத்துவத் தேவைகளையும் ஈடு செய்ய முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ள நிவாரண உதவிகளையும் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.