சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தமிழக மக்களை கொச்சைப்படுத்தியதாக கூறி நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிரண்பேடியை கண்டித்து வெளிநடப்பு செய்தார். அப்போது கிரண்பேடியை குடியரசு தலைவர் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேபோல் கிரண்பேடியின் கருத்துக்கு அ.தி.மு.க மற்றும் டி.டி.வி.தினகரன், வைகோ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக மக்களையும், அரசியல்வாதிகளையும் இழிவாக குறிப்பிட்ட ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரி தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் மாளிகை அருகில் நடைபெற்ற அப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிரண்பேடிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போராட்டத்தின் காரணமாக ஆளுநர் மாளிகை செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் ஆளுநர் மாளிகையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.