உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று, சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.
சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.