Skip to main content

இருவேறு கொடூர வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

afasf

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் தனசேகர்(29). கூலித் தொழிலாளியான இவர் கடந்த (20.01.2019) அன்று அப்பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தனசேகரை கைது செய்து கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.

 

அதில் தனசேகருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நலவாழ்வு நிதி மூலமாக கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரூபாய் 5 லட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

Judges who handed down action verdicts in two different cruel cases

 

இதேபோல் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரசன்ன சரவணன்(29). இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் படித்தபோது பி.எட் படித்த 22 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பிரசன்ன சரவணன் காதலியுடன் நெருங்கிப் பழகினார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். எனினும் பிரசன்ன சரவணன் திருமணத்திற்கு மறுத்தார். அதையடுத்து பிரசன்ன சரவணனின் தந்தை பக்கிரி,  தாய் அமுதா ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நியாயம் கேட்டனர்.

 

ஆனால் பிரசன்ன சரவணன் பெற்றோர், திருமணத்திற்கு வரதட்சணையாக 30 சவரன் நகை மற்றும் கார் கேட்டனர். இந்நிலையில் கடந்த 2017ல் அந்த பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும் அவரை திருமணம் செய்ய பிரசன்ன சரவணன் மறுத்ததுடன் 'குழந்தை தனக்குப் பிறக்கவில்லை' எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் பிரசன்ன சரவணன்,  பக்கிரி, அமுதா ஆகியோரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பிறந்த குழந்தையின் தந்தை பிரசன்னா சரவணன் தான் என்பது மரபணு சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பாலகிருஷ்ணன்,  சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார். இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், பக்கிரி, அமுதா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்