Skip to main content

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’- இ.பி.எஸ் கூறிய காரணத்தை நீதிபதிகள் ஏற்க மறுப்பு

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Judges refused to accept the reasons given by edappadi Palaniswami in the Kodanad case

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தன்னை தொடர்புபடுத்தி தவறாக வீடியோ வெளியிட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் அந்த வழக்கில் ரூ. 1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் தன்னால் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதிலிருந்து விலக்களிக்கவேண்டும் என்றும், அத்தோடு, தனது வீட்டிலேயே வந்து வழக்கறிஞர் ஆணையர் ஒருவர் வந்து சாட்சியங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த தனிநீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்று சாட்சியங்களைப் பெற வழக்கறிஞர் ஆணையராக எம்.கார்த்திகேய பாலனை நியமித்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பத்திரிகையாளர் மேத்யூ தாமஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃவிக் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எதனடிப்படையில் நீங்கள் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், காலில் ஏற்பட்ட காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோருவது என்று கூறினர். உடல்நிலை காரணங்களைத் தவிர வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று கூறிய நீதிபதிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தங்களது தரப்பு வாதங்களை எடுத்துக்கூற வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து வழக்கை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்