நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தகுதிநீக்கம் செய்யமுடியாது என நேற்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு குறித்து தினகரன் அணியைச் சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், இந்த தீர்ப்பானது விலைகொடுத்து வாங்கப்பட்ட ஒன்று, வழங்கப்பட்ட ஒன்றல்ல என விமர்சித்திருந்தார்.
இன்று தலைமை நீதிபதி முதல் அமர்வில் வழக்கம் போல் விசாரணை தொடங்கியதுபோது சூரியப்பிரகாஷ் என்ற வழக்கறிஞர் ஆஜராகி, இந்த தீர்ப்பு வாங்கப்பட்ட தீர்ப்பு என்றும் வழங்கப்பட்டதல்ல என தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் கருத்து குறித்து முறையிட்டார்.
அப்போது அந்த முறையீட்டிற்கு பதிலளித்த நீதிபதி, நீதிபதிகளான நாங்கள் தங்கள் பணிக்கும் மனசாட்சியிற்கும் உண்மையாகவே செயல்படுகிறோம் எனவும், தாங்கள் பயப்படுவது ஆண்டவனுக்கு மட்டுமே எனவும், எங்களை பற்றி வரும் இதுபோன்ற விமர்சனங்களை தாங்கள் பெரியதாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் விளக்கமளித்தார்.
மேலும் இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் கோடைவிடுமுறைக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.