கோவையில் உணவு பாதுகாப்புக்கு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நான்காவது முறையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தாமஸ் வீதி பகுதியில் வாகாராம் என்பவர் வாடகைக்கு சிறய அறை ஒன்றை எடுத்து ஊதுபத்தி குடோனாக பயன்படுத்துவதாக கூறி வாடகைக்கு எடுத்துள்ளார்.
அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குட்கா, பான்மசாலா, போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 250 கிலோ எடையுடைய குட்கா, பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்க கூடும் எனவும் தெரிவித்தனர். கடந்த 20 நாட்களில் கோவையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் மூன்றரை டன் எடையுடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து குட்கா புதையல்கள் சிக்கிவருவது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.