Skip to main content

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு; நீதிபதி சரமாரி கேள்வி!

Published on 12/11/2024 | Edited on 12/11/2024
judge barrage of questions Actress Kasthuri  anticipatory bail plea

பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. கஸ்தூரியின் பேச்சுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். கஸ்தூரியின் இந்த பேச்சு பூதாகரமான நிலையில் இது குறித்து சென்னை, மதுரை, திருச்சி எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையில் பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்ததோடு கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

எழும்பூர் போலீசார், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பேசுவது; ஜாதி, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே கழகத்தை ஏற்படுத்துவது; அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல்; அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்காக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். அதேசமயம் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (12.11.2024) விசாரணைக்கு வந்தது. அதில் நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது கஸ்தூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சமூகவலைத்தளத்தில் மன்னிப்பு கோரிய பின்னரும், மன்னிப்பு கேட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “குறிப்பிட்ட சமூக பெண்களை அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என ஏன் கூறினார். நடிகை கஸ்தூரி எப்படி இவ்வாறு கூறலாம். அதற்கான அவசியம் என்ன?. சமூக வலைத்தளத்தில் இருந்து கஸ்தூரி வீடியோவை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக மனுதாரர் பேசியது தேவையற்றது. தன்னை கற்றவர்,  சமூக ஆர்வலர் எனக் கூறிக்கொள்பவர் எப்படி இவ்வாறு பேசலாம். கஸ்தூரி தன்னை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாகத் தெரியவில்லை. அவர் கூறிய கருத்தை நியாயப்படுத்த விரும்புவதாகவே உள்ளது. தெலுங்கு மக்கள் தமிழகத்திற்கு வந்தவர்கள் அல்ல. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தின் பகுதியானவர்கள்” என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி முன்வைத்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி மாலை 04.30 மணிக்கு ஒத்திவைத்தார். 

சார்ந்த செய்திகள்