அரசுப் பேருந்து ஓட்டுநரை அடித்ததற்காக, நடுரோட்டில் நின்றுகொண்டு மன்னிப்பு கேட்ட நீதிபதியின் வீடியோ காட்சி வெளியாகி சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சுங்கம் பகுதியிலிருந்து கடந்த 15 ஆம் தேதி மதியம் 12 மணியளவில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5சி பேருந்து டவுன்ஹால் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் 2வது நீதிபதி செந்தில் ராஜா தனது காரில் அதே வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயம் நீதிபதியின் காரை கடக்க முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், அவரது காரை லேசாக உரசுவதுபோல் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நீதிபதி செந்தில் ராஜா, அந்த அரசுப் பேருந்தை ஓவர் டேக் செய்து காரை சாலையில் நிறுத்திவிட்டு பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதை அடுத்து பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அரசுப் பேருந்து ஊழியர்களும், பொதுமக்களும் கூட தொடங்கினர். அதைத் தொடர்ந்து, பந்தய சாலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசுப் பேருந்து ஊழியர்களையும், நீதிபதியையும் சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால், நீதிபதி தரப்பினர் மன்னிப்பு கேட்டால்தான், இங்கிருந்து கலைந்து செல்வோம் என பேருந்து ஊழியர்கள் விடாப்பிடியாக இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகு, பேருந்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், நீதிபதியிடம் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.