“தேர்தல் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பார்க்கமுடியவில்லை” எனக் கரூர் எம்.பி ஜோதிமணியிடம் சாமானியர் ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நாட்டின் 77 வது சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கலந்துகொண்டார். அப்போது அந்த கூட்டத்தில், தேர்தல் நேரத்தில் 20 நாட்களுக்குள் 6 தொகுதிகளைச் சுற்றி வரும் நீங்கள், மற்ற நேரங்களில் மக்களை கண்டுகொள்வதில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் உங்களை நாங்கள் பார்க்கிறோம். ஓட்டு கேட்கும் போது வருவீர்கள், பிறகு அடுத்த தேர்தலுக்குத்தான் மீண்டும் மக்களைச் சந்திப்பீர்கள்” என ஒருவர் எம்.பி ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு விளக்கமளித்த எம்.பி.ஜோதிமணி, “1 வருடத்தில் 150 நாட்கள் மக்களவை கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். மற்ற நாட்களில் மக்களைச் சந்தித்து தொகுதியை கவனித்து வருகிறேன்” என்று விளக்கமளித்தார். மேலும் இதனை பாஜகவின் மலிவான செயல் எனவும் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.