கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் ஜோதிமணி. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரையை எதிர்த்து களமிறங்கிய அவர், பல இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார். எளிமையை அதிகம் விரும்பும் அவர், நேற்று விமானநிலையத்தி்ல் பயணிகள் அனைவரும் நுழையும் பொது நுழைவாயிலில் நீண்ட நேரம் காத்திருந்து தன்னுடைய ஆவணங்களை சரிபார்த்த பிறகு விமான நிலையத்தின் உள்ளே சென்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயல்பாகவே பாஸ்போர்ட் சரிபார்க்கும் இடத்தில் பெரும்பாலும் காத்திருப்பதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்கள் அருகில் உள்ள சிறப்பு வழிகளைத்தான் உபயோகிப்பார்கள்.
ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக நேற்று விமானநிலையம் சென்ற ஜோதிமணி, பொதுமக்களோடு வரிசையில் நின்று, நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு விமான நிலையத்திற்கு சென்றார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பாலா வெற்றிவேல் என்பவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து 'எளிமையான எம்.பி, நம்ம கரூர் ஜோதிமணி அக்கா' என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதை ரீடுவிட் செய்துள்ள ஜோதிமணி, 'அரசியல்வாதிகள் மக்களோடு மக்களாக இருப்பதுதான் இயல்பானது' என்று தெரிவித்துள்ளார்.