ஓமலூர் பகுதியில் ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதிக அளவில் நீர் வெளியேறி வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தினமும் 40 எம்எல்டி குடிநீர் மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2:30 மணி அளவில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி, ரெட்டிபட்டி என்ற பகுதியில் ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குழாய் அழுத்தம் தாங்காமல் திடீரென வெடித்து விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிக அளவிலான தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டு வெளியேறியது. தொடர்ந்து அருவி வெள்ளம் போல் பீய்ச்சியடிக்கும் நீரைப் பார்க்க அக்கம்பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.