சென்னை எழும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளரிடம் 5 சவரன் நகை திருடப்பட்ட நிலையில் போலீசார் நூதன யுக்தியைக் கையாண்டு நகையை மீட்டனர். மேலும் நகை மீட்கப்பட்டதற்கு அலுவலக உதவியாளர் தரையில் மண்டியிட்டு கண்ணீருடன் போலீசாருக்கு நன்றி சொல்லியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூரில் உள்ள புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் அலுவலக உதவியாளராக உஷா என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 17ஆம் தேதி வழக்கம்போல பணியை முடித்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்தார் உஷா. அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க தாலியைக் காணவில்லை. இதனால் அதிர்ந்து போன உஷா உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். நகை திருட்டு தொடர்பாக எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒருவரே அந்த நகையைத் திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனை மெய்ப்பிப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற காவல்துறையினர் ஒரு நூதன யுக்தியை செயல்படுத்தினர்.
அனைத்து ஊழியர்களையும் கூப்பிட்டு உஷாவின் நகையைத் திருடியது யார் என்பதை நாங்கள் கண்டறிந்துவிட்டோம். நாங்கள் ஒரு தனி அறையை ஒதுக்கி உள்ளோம் அந்த அறையில் பை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் அந்த அறைக்குச் சென்றுவிட்டு வர வேண்டும். நகையை எடுத்தவர் அந்த நகையைப் பையில் வைத்துவிட வேண்டும். அப்படி நீங்கள் வைக்கவில்லை என்றால் நாங்களாகவே உங்களைக் கைது செய்து சிறையில் அடைப்போம் என எச்சரித்தனர். அதன்படியே ஊழியர்கள் அனைவரும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஒவ்வொருவராக அறைக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் இறுதியில் அந்தப் பையில் நகை இருந்தது. நகை கிடைத்துவிட்டது எனப் போலீசார் உஷாவுக்கு தெரிவித்த நிலையில், மகிழ்ச்சியடைந்த உஷா தன்னை மறந்து தரையில் விழுந்து போலீசாருக்கு அழுது கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.