போக்குவரத்து நெரிசலில் காரை உரசிய லாரி ஓட்டுநர் ஒருவரை நகைக்கடை உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதிக்கு அருகே உள்ளது குலசேகரம் சந்தை. இந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், குலசேகரம் சந்தை பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருபவர் சுரேஷ்குமார். இவர் தனது காரை எப்போதும் நகைக்கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 20 ஆம் தேதி காலை 10 மணியளவில் கடையை திறந்த சுரேஷ்குமார், வழக்கம் போல் தனது காரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அந்த சமயம், மதியம் 1 மணியளவில் அவ்வழியாக லாரி ஒன்று வந்துள்ளது. மேலும், அந்த சாலை மிகக் குறுகலாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய லாரி திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சுரேஷ்குமாரின் கார் மீது லேசாக மோதியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நகைக்கடை உரிமையாளர்கள் அந்த லாரி ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர். அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுநர் அங்கிருந்து வேறொரு லாரியில் ஏற முயன்றபோது அங்கு வந்த நகைக்கடை உரிமையாளர்கள் அந்த லாரி ஓட்டுநரை கீழே இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல் நிலைய போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், லாரி ஓட்டுநர் ஒருவரை நகைக்கடை உரிமையாளர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.