தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் பொதுவெளியில் நடக்கும் தவறுகள், கடைகளில் நடக்கும் திருட்டுகள், மோதல்கள் போன்றவற்றை அப்பட்டமாக வெளிச்சம்போட்டு காட்டுகிறது சிசிடிவி காட்சிகள். இந்த நிலையில் திருச்செந்தூரில் திமுக பெண் வார்டு செயலாளர் ஒரு கடையில் நகையை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவர் கேஷுவலாக நகை வாங்க வந்துள்ளார். அப்பொழுது கடைக்காரரிடம் நகைகளை காட்ட சொன்ன அந்த பெண் வேறு சில நகைகளை காட்டும்படி சொல்லி திசை திருப்பிவிட்டு தான் கையில் கொண்டுவந்த கவரிங் நகையை தங்க நகைக்கு பதிலாக மாற்றி வைத்தார். மேலும் தங்க நகைக்கு வைக்கப்பட்டிருந்த விலைப்பட்டியல் டேக்கை அவர் மாற்றி வைத்த கவரிங் நகைக்கு கட்டிவிட்டார்.
விற்பனையாளர் வேறு நகையை காட்ட ஆயத்தமானபோது எனக்கு எந்த நகையும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு கைப்பையில் வைக்கப்பட்ட நகையுடன் அவசரமாக நடையை கட்டினார் அந்த பெண். கடைக்காரர் அவரின் செயலால் சந்தேகமடைந்து கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது, நகையை மாற்றி வைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. அந்தப்பெண்ணைத் துரத்திப் பிடித்த கடையின் உரிமையாளர் நகையை கைப்பற்றினார். மேலும் அந்த பெண் குறித்த விசாரணையில் அவர் திருச்செந்தூர் அங்கமங்கலம் 8 வது திமுக பெண் வார்டு செயலாளர் பொற்கொடி என்பது தெரியவந்தது.