ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 235 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சூரம்பட்டி என். ஜி. ஜி. ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 8-ந் தேதி காலை மனைவி சாதனாவுடன் தேனிக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 235 பவுன் நகைகள், ரூ.48 லட்சம் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றார்.
சுப்பிரமணியின் புகாரைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையனை தேடி கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்ற கிரைம் போலீசார் 9 பேர் முகாமிட்டு கொள்ளையனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆடிட்டருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தகவல் கசிந்து மர்ம நபர் கைவரிசை காட்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது, 'வீட்டை பூட்டிவிட்டு ஆடிட்டர் குடும்பத்துடன் வெளியூர் செல்வதை முன்கூட்டியே அறிந்து மர்ம நபர் காரில் வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மொபைல் போன் டவர் அடிப்படையாகக் கொண்டு மர்ம நபரை கண்டறிய தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். பெங்களூரைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் கைரேகைகளுடன் மர்ம நபரின் கைரேகை ஒப்பிடப்பட்டு வருகிறது. 400 -க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்' என தெரிவித்துள்ளனர்.